பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் - பாகம் 8
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கான முக்கிய சான்றாக என்றென்றும் இறுதி வேதமாகிய குர்ஆன் இருக்கிறது. இது எல்லாம் வல்ல இறைவனால் வானவர் கேப்ரியல் மூலம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
சர்வவல்லமையுள்ள அல்லாஹ், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஹம்மது நபியின் நபித்துவத்திற்கான கூடுதல் ஆதாரங்களை அவர்களின் வேதத்திலேயே கொடுத்துள்ளான் என்கிறது குர்ஆன்.
அவ்வாறான சில முன்னறிவுப்புகள் யூர்களும் கிறிஸ்தவர்களும் சொந்த வேதங்களாக நம்பும் தோரா மற்றும் நற்செய்திகளில் இன்றளவும் காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று நாம் பார்க்கப்போவது ஏசாயா 42 ஆவது அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும் (முதல் 4 வசனங்களாகும்).
ஏசாயா 42
ஏசாயாவின் பழைய ஏற்பாட்டு புத்தகத்தின் 42 வது அத்தியாயம் ஒரு அரேபிய நபி அதாவது முகம்மது நபிகள் நாயகத்தின் வருகையை தெளிவாக முன்னறிவிக்கிறது. ஏசாயா 42வது அத்தியாயத்தில் உள்ள வசனங்கள் வரிக்கு வரி எவ்வாறு முஹம்மது நபியுடன் தொடர்புப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
1️⃣ [ஏசாயா 42:1]"இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்."
(ஏசாயா 42:1)
ஏசாயாவில் தேவன் அவர் அனுப்பும் ஒரு சிறப்பு நபரை எடுத்து சொல்லி நம் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறார். அவர் இந்த நபரை பற்றி கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:
👉 "நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே;" . இது எப்படி முகம்மது நபியை குறிக்கிறது ⁉️
மேற்கண்ட வசனத்தில் நபிகள் நாயகத்தின் சிறப்பு பெயர்களில் குறைந்தது மூன்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவை
01.“தாசன்”
02. “தெரிந்து கொள்ளப்பட்டவர்”
03. “பிரியமானவர்”.
🔴 01. தாசன் (servant) :
"தாசன்" என்றால் அடிமை என்று பொருள். முஹம்மது நபி 'தேவனின் அடிமை' என்று அழைக்கப்பட்டார், இது அரபு மொழியில் “அப்துல்லாஹ்” என்று சொலாலப்படும். இதற்கு ஆதாரமாக புகாரி 3445 பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தியை பார்க்க முடிகிறது. அது கீழ்கண்டவாறு பதிவு செய்கிறது..
👉 "இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
'நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஸஹீஹ் புகாரி : 3445.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
🔴 02.தெரிந்து கொள்ளப்பட்டவர் /தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்
“தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்” என்பதற்கு அரபு மொழியில் “முஸ்தபா” என்று கூறுவார்கள். இது நபிகள் நாயகத்தின் சிறப்பு பெயர்களில் ஒன்றாகும்.
ஆதாரமாக :
👉அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நஜ்ஜாஸ் (மன்னர் ) இறந்த நாளில் அவருக்கு இரங்கல் தெரிவித்தார்: (உங்கள் சகோதரருக்காக மன்னிப்பு கோருங்கள்) பின்னர் மக்கள் நபியாகிய முஸ்தபாவிடம் (தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம்) வெளியே சென்று அவருக்குப் பின்னால் வரிசையாக நின்று நான்கு தக்பீர்கள் சொன்னார்கள்.
(அருவிப்பாளர் : அபு ஹுரைரா ,புதுப்பிக்கப்பட்டது: இப்னு ஹிப்பன், ஆதாரம்: சாஹிஹ் இப்னு ஹிப்பன் ,பக்கம் அல்லது எண்: 3101)
மேலும் முகம்மது நபிக்கு முஸ்தபா எனும் சிறப்பு பெயர் இருந்ததாக , சாஹிஹ் இப்னு ஹிப்பன் ,பக்கம் எண்: 1856 போன்ற பல ஆதாரமும் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
🔴03. பிரியமானவர்:
என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர் என்பது அந்த நபர் தேவனுக்கு பிரியமானவர் என்பதைக் காட்டுகிறது. இதை அரபி மொழியில் ‘ஹபீபுல்லா’ என்று சொல்வார்கள். அதாவது “கடவுளுக்குப் பிரியமானவர்”. இது நபிகள் நாயகத்தின் பெயர்களில் ஒன்றாகும்.
👉ஆதாரம்: முகம்மது நபிக்கு ஹபீப் என்ற சிறப்பு பெயர் இருந்ததாக ஸஹீஹ் அபுதாவூத் ஹதிஸ் எண்: 1642 இலும் தக்ரீஜ் ஹதீஸ் அல் மசாபி நூல் ஹாதீஸ் எண்: 5/127 இலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
🔴 "நான் என் ஆவியை அவர் மீது வைப்பேன் ..."
இங்கே ஏசாயா குறிப்பிடும் வரவிருக்கும் கர்த்தரின் ஊழியர் தேவதூதரை கொண்டு பலப்படுத்தப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இங்கே "ஆவி" என்று சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதை கண்டதும் சில கிறிஸ்தவர்கள் இது கிறிஸ்தவத்தின் ஆதாரமற்ற மூன்றாவது ஆள் தத்துவமான "பரிசுத்த ஆவி" என்று நினைக்கலாம். ஆனால் அவர்களின் அந்த நம்பிக்கை பிழையானது. ஏனெனில் பழைய ஏற்பாட்டில் ஏசாயா 42:1 இல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ருவாச்(Ruach)’ என்ற சொல் “ஆவி” என்பதற்கு எபிரேய வார்த்தையில் பழைய ஏற்பாடு முழுவதும் தீர்க்கதரிசி என்று சொல்வதற்கும், சில இடங்களில் தேவதூதர்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணாகமம் 11 26: அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
👉எண்ணாகமம் 11 29: அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
👉1 சாமுவேல் 10 6: அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
மேற்கண்ட வசனங்கள் அனைத்துமே மனிதர்கள் தீர்க்கதரிசனம் சொல்ல தக்கதாக கர்த்தர் தமது ஆவியை அவர்கள் மேல் அமர செய்வதாக தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆவி என்ற சொல் பழைய ஏற்பாட்டை பொருத்தவரையில் வானவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
👉அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.
[சகரியா 6: 5]
மேலும் ஆவிகள் என்று குறிப்பிடப்படும் வானவர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் பழைய ஏற்பாடு போதிக்கிறது.
👉தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்(Ruach), தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
(சங்கீதம் 104:4)
ஜிப்ரயீல் என்னும் பரிசுத்த ஆன்மாவை கொண்டு முஹம்மது நபிக்கு வஹீ அருளப்பட்டதாக குர்ஆன் போதிக்கிறது.
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.
(அல்குர்ஆன் 42:52)
வரவிருக்கும் ஊழியக்காரர் தன் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல், முழு உலக மக்கள் மீதும் அக்கறை காட்டுவார் என்று ஏசாயா மேலும் கூறுகிறார்:
🔴 "... அவர் தேசங்களுக்கு நீதியைக் கொடுப்பார்"
ஏசாயா 41: 1-ல் “நீதி” என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் எபிரேய வார்த்தை ‘மிஷ்பத்’ ஆகும், இது விவிலிய எபிரேய அகராதிகளின் படி தீர்ப்பையும் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் எபிரேய வர்ணனையாளர்கள் இந்த தீர்ப்பை ஒரு முழுமையான வாழ்க்கை முறையின் அர்த்தத்தில் விரிவானதாக விளக்குகிறார்கள். மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் இறைவனது சட்டங்களை குறிக்கிறது. முஹம்மது நபியும் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் ஷரியத் சட்டத்தை போதித்து இருக்கிறார். முஹம்மது நபிக்கு போதிக்கப்பட்ட ஷரியத் சட்டத்தையே முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஹம்மது நபி தனது வாழ்க்கையில் இஸ்லாமிய விரோதிகளின் பல கொலை முயற்சிகளில் இருந்து இறைவனால் காப்பாற்றப்பட்டு அவர் தனது பணியை முடித்து, இறை சட்டங்களின்படி மக்களை நியாயந்தீர்ப்பதன் மூலம் நீதியை நிலைநாட்டினார். இஸ்லாத்தின் செய்தியை முழுமையாக நிலைநாட்டினார்:
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.
(அல்குர்ஆன் 5:3)
2️⃣ [ஏசாயா 42:2] அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
[ஏசாயா 42:6] நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
இங்கே "கூக்குரலிடவுமாட்டார்(not cry)" என்ற சொற்றொடர் "இறைவன் அவருக்குக் கொடுத்த கடமையைப் பற்றி புகார் அல்லது வருத்தம் தெரிவிக்க மாட்டார்" என்ற அர்த்தத்தில் ஆகும். இப்பணியில் மகத்தான சிரமம் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் முஹம்மது நபி தனது வாழ்நாள் முழுவதும் சர்வவல்லமையுள்ள இறைவனால் வழங்கப்பட்ட பணியில் ஒருபோதும் ஒருபோதும் வருத்தப்படவில்லை.
இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள பிரகாரமே நபிகள் நாயகத்தின் ஆளுமை தன்மை இருந்து உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் பேச்சில் மென்மையானவர் மற்றும் சந்தைகளில் தனது சத்தத்தை உயர்த்தாவராகவும் இருந்தார்.
👉அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!' என பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2125.
அத்தியாயம் : 34. வியாபாரம்
3️⃣ ஏசாயா 42
3: அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
இந்த விளக்கம் முஹம்மது நபி அவர்களின் மென்மையான தன்மையின் எடுத்து சொல்கிறது. இதற்கு குர்ஆன் சாட்சியம் நகருகிறது.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக.
[அல்குர்ஆன் 3:159]
4️⃣ ஏசாயா 42
4: அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.
இந்த வசனத்தின் முதல் பகுதி குறிப்பிடுகிறது:
✍️முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருந்தபோது மக்கத்து காபிர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை விட்டுக்கொடுத்தால் பொன்னும் பொருளும் பதவியும் தருவதாக முகமது நபியிடம் ஆசைவார்த்தை கூறினார்கள். இதை நபியவர்கள் புறக்கணித்ததால் கொலை முயற்சியும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் போன்றவை முகமது நபிக்கு எதிராக செய்யப்பட்டன. ஊரை விட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் முஹம்மது நபியும் மற்ற முஸ்லிம்களும் இலைகளைத் தின்று உயிர் வாழ வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருந்தும்கூட முகமது நபியவர்கள் தனது இஸ்லாமிய பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. பல்வேறுபட்ட இக்கட்டான நெருக்கடிகளை முஹம்மது நபிக்கு காபிர்கள் கொடுத்த போதிலும் ஒரு கையில் சூரியனையும் மற்றொரு கையில் சந்திரனை கொடுத்தாலும் இஸ்லாமியப் பிரச்சாரத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று உறுதியாக பின்பற்றியவர்கள் தான் முஹம்மது நபி அவர்கள்.
✍️ எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் வரை அல்லது நான் அழியும் வரை இதை விடமாட்டேன் என்று கூறிவிட்டு கண் கலங்கியவர் களாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
✍️ மேற்கண்ட சம்பவம் முஹம்மது நபி பணம், பெண் அல்லது அதிகாரம் போன்ற உலக லாபத்திற்காக இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதில் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் இருந்துள்ளார் என்பதை பறைசாற்றுகிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் கடுமையான துன்புறுத்தலையும் விரோதத்தையும் எதிர்கொண்டார். இந்த கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டபோது, அவரது தோழர்கள் பலர் ஊக்கம் இழந்தனர். ஆனாலும் அவர் இஸ்லாத்தின் செய்தியை விட்டுவிடாமல் சத்தியப்பாதையில் உறுதியாக நின்றார். அவர் தனது நபித்துவ பணியில் உறுதியுடன் இருந்தார். மென்மேலும் போராடினார்:
👉 கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3612.
அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
✍️ இஸ்லாத்தின் ஆட்சி உறுதியாக நிலைபெறும் வரை அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் தொடர்ச்சியான போர்களில் அசாதாரணமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், நபி ஊக்கம் இழக்கவில்லை. முஹம்மது நபியும் மற்றும் அவரது தோழர்களும் தங்கள் எதிரிகளை அதிகமானவர்களாக கண்டபோது, அது அவர்களின் நம்பிக்கையை சிதைக்காமல், மாறாக அவர்களின் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை உறுதி படுத்தியது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் பல கொலை முயற்சிகளில் இருந்து பாதுக்காக்கப்பட்டு, அவர் தனது பணியை முடித்து, இறைவனின் சட்டங்களின்படி மக்களை நியாயந்தீர்ப்பதன் மூலம் இஸ்லாம் எனும் நீதியை நிலைநாட்டினார். உண்மையில் இதன் பிறகே இஸ்லாத்தின் செய்தி முழுமையடைந்தது:
👉 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.
(அல்குர்ஆன் 5:3)
📝 ஏசாயாவின் வசனத்தின் இரண்டாம் பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது:
"... அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்."
இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள தோரா என்கிற எபிரேயச் சொல்லுக்கு அறிவுறுத்தல் அல்லது சட்டம் என்று பொருள். ஏசாயா 42 இல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசி ஒரு புதிய வேதத்தை கொண்டு வருவார் என்பதை மேற்கண்ட வசனம் சொல்கிறது. ஏசாயாவின் காலத்தில் இஸ்ரவேலர்கள் மோசேவுக்கு கொடுக்கப்பட்ட தோராவை தங்கள் வசம் வைத்திருக்கும் சூழ்நிலையிலும் கூட ஏசாயா 42 இல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசி சட்டங்களை(தோரா) கொண்டு வருவார் என்று தெளிவாக சொல்கிறது. இதை குர்ஆன் உண்மைப்படுத்துகிறது.
👉 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.
(அல்குர்ஆன் 5:48)
இஸ்லாத்தின் சட்டம் கிழக்கே வடச்சீனா வரையிலும், மேற்கே தெற்கு பிரான்சு வரையிலும் பரவியது. உண்மையில் பல தீவுகள் அவரது சட்டத்திற்காக காத்திருந்தன. இஸ்லாமிய சட்டம் முஸ்லிம் படைகளுடன் வந்தபோது, அவர்கள் தங்களை விடுவித்த முஸ்லிம் படைகளை வரவேற்றனர். சிரியா, எகிப்து மற்றும் ஸ்பெயினில் இது தான் நடந்தது. இஸ்லாத்தின் வருகையால் அரேபியாவைச் சுற்றியுள்ள அனைத்து அடக்குமுறை சக்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. குர்ஆனின் தேவன் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறார்:
👉 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
(அல்குர்ஆன் 4:75)
கருத்துகள்
கருத்துரையிடுக