இயேசுவின் சிலுவை மரணம் பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளதா?
🌟இயேசுவின் சிலுவை மரணம் பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளதா??🌟
✍️கிறிஸ்தவர்களின் பார்வையில் சிலுவை மரணத்தின் அவசியம் என்பது ஆதி பாவத்தில் இருந்து தொடங்குகிறது. ஆதிமுதல் எந்த ஒரு தீர்க்கதரிசியும் ஆதி பாவத்தை போதிக்கவில்லை என்ற போதிலும் கூட கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தையும் ஆதி பாவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். சிலுவை மரணம் என்பது பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் உறுதியாக வாதிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஏசாயா புத்தகத்தின் 53 வது அதிகாரத்தின் 1 முதல் 12 வரை உள்ள வசனங்கள் என்பது இயேசுவின் சிலுவை மரணத்தை பற்றி தான் பேசுகிறது என்று குறிப்பிடுகின்றனர். இயேசு அக்கிரமக்காரர்களின் பாவங்களை சுமந்து அக்கிரமக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டு கொல்லப்படுவார் என்று ஏசாயா 53 வது அதிகாரம் குறிப்பிடுகிறது என்று கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர்.
⭐அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
(ஏசாயா 53:12)
✍️ஏசாயா 53 வது அதிகாரம் என்பது இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் என்று உறுதியாக கிறிஸ்தவர்கள் சொன்னாலும் கூட, அவர்களின் இந்த வாதத்தை ஏசாயா புத்தகத்தின் 53 வது அதிகாரம் உடைத்து விடுகின்றது.
⭐கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
(ஏசாயா 53:10)
✍️மேற்கண்ட வசனத்தில் குற்ற நிவாரண பலியாக கொடுக்கப்படுபவர் தமது சந்ததியை கண்டு நீடித்த நாளாயிருப்பார் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் இயேசுவுக்கு சந்ததி கிடையாது. அப்படியிருக்கும்போது இந்த அதிகாரம் எப்படி இயேசுவுக்கு பொருந்தும் என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு கிறிஸ்தவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. உண்மை என்னவெனில் இந்த அத்தியாயம் இயேசுவைக் குறித்து பேச வில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பழைய ஏற்பாட்டிற்கு சொந்தக்காரரான யூதர்கள், தங்களது வரலாறு முழுவதும் இந்த அத்தியாயம் இஸ்ரவேலைக் குறித்து பேசுகிறது என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இறைவனுடைய பாதையில் இன்னல்களுக்கு ஆளாகும் எவருக்கும் இந்த அத்தியாயம் பொருந்தும்.
✍️உதாரணத்திற்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள எரேமியா தீர்க்கதரிசிக்கு ஏசாயா 53 அதிகாரம் மிக சரியாக பொருந்தும். இறைவனது வார்த்தைகளை போதித்த தீர்க்கதரிசி எரேமியாவை அவரது சமூகம் மட்டுமில்லாது அவரது குடும்பமும் நிராகரித்தது.
⭐உன் சகோதரரும், உன் தகப்பன்வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.
(எரேமியா 12:6)
✍️எரேமியா தனது சொந்த மக்களாலேயே கடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். அடித்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
⭐அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.
(எரேமியா 37:15)
✍️ஏசாயா 53 வது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கத்தரிசனத்தை எரேமியா தனக்கு மேற்கோள்காட்டி பேசுகிறார்.
⭐அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர். மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
(எரேமியா 11:18-19)
✍️எரேமியா மேற்கோள் காட்டும் மேற்கண்ட வசனம் ஏசாயா 53 அதிகாரத்தில் இருந்து:
⭐அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
(ஏசாயா53:7)
✍️அதனால் ஏசாயா 53 அதிகாரத்தை இயேசுவுக்கு பொருந்தும் என்று ஒருபோதும் கூறிவிட முடியாது.
✍️மேசியாவின் தீர்க்கதரிசனத்தை பற்றி பேசுகின்ற பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் அனைத்தும் வரப்போகும் மேசியா ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது. இதன் காரணமாகவே மத்தேயு 4வது அதிகாரத்தில் 6 மற்றும் 7 வது வசனத்தில் சாத்தான் பழைய ஏற்பாட்டில் மேசியாவைப்பற்றி சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை மேற்கோள்காட்டி இயேசுவிடம் பேசுகிறான். அதற்கு இயேசுவும் அந்த தீர்க்கதரிசனத்தை மறுக்காமல் கர்த்தரை பரீட்சை செய்யாதிருப்பாயாக என்று மட்டும் சொல்கிறார்.
⭐நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
(மத்தேயு 4:6-7)
✍️பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீத புத்தகத்தில் வரப்போகும் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம்:
⭐ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
(சங்கீதம் 91:10-15)
✍️சங்கீதம் 91 ஆவது அதிகாரத்தில் வரப்போகும் மேசியாவுக்கு ஏற்படும் இன்னல்களை விட்டும் அவரை கர்த்தர் காப்பாற்றுவார் என்றும், அவரது வழியில் எல்லாம் அவரை காக்கும்படிக்கு தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்றும், ஆபத்திலிருந்து தப்பிக்க செய்து கனப்படுத்துவேன் என்றும் மேற்கண்ட வசனம் மிகத் தெளிவாக கூறுகிறது. ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக மனிதர்கள் அனைவரும் பாவிகளாக பிறக்கின்றனர் என்று சொல்வதும் அந்த பாவத்திற்கு பிரகாரமாக பரிகாரமாக இயேசு சிலுவையில் கொடுக்கப்பட்டால் என்று சொல்வதும் வேதத்திற்கும் தீர்க்கதரிசிகளின் உபதேசித்து இருக்கும் முற்றிலும் முரணான ஒன்றாகும்.
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ
⭐மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை.
(அல்குர்ஆன் : 4:157)
கருத்துகள்
கருத்துரையிடுக