இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமான?
✍️முஸ்லிமல்லாதவர்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதே. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான நம்பிக்கையாளர்கள் இருப்பதே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டவில்லை என்பதற்கு ஒரு போதுமான சாட்சியமாக விளங்குகிறது.
✍️இஸ்லாத்திடம் இருந்த சத்தியமும் உண்மையும் தர்க்கரீதியான காரணங்களுமே அது இன்று உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான நம்பிக்கையாளர்களை கொண்டிருப்பதற்கான காரணமே தவிர தவிர அது வாளால் பரப்பப்பட்டது என்பது அல்ல.
✍️இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் அதை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் ஒவ்வொருவருக்கும் முழு சுதந்திரம் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை.
👉(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்குர்ஆன் 2:256)
👉முஸ்லிம் மத வெறியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட இனக்குழுக்கள் வாள்முனையில் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி முஸ்லிம்களால் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்ற வரலாற்றாசிரியர்களின் குற்றச்சாட்டு பெரும் பொய்யாகும் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான டி லாஸி ஓலெய்ரி(De Lacy O’Leary) என்பவர் குறிப்பிடுகின்றார்.
👉தாமஸ் கார்லைல் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் தனது Heroes and Hero worship என்ற புத்தகத்தில் இஸ்லாம் பற்றிய தவறான புரிதலை மறுத்துள்ளார். ஒவ்வொரு கருத்தும் இந்த உலகில் மிகச் சிறுபான்மையான ஒரு தனி மனித மூளையில் இருந்தே உதயமாகிறது. ஒட்டு மொத்த உலகத்திலும் ஆரம்பத்தில் தனி ஒரு மனிதனே அந்த புதிய சித்தாந்தத்தை நம்புகிறான். புதிய சித்தாந்தத்தை கொண்டு அந்த தனி ஒரு மனிதன் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் முரண்பட்டு நிற்கின்றான். பிறகு அவன் தனக்கென ஒரு வாளை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் விரோதமாக தனது சித்தாந்தத்தை நிலைநிறுத்த சென்றால் அது அவனுக்கு சிறிதளவே உதவி செய்யும். உண்மையில் அந்த சித்தாந்தமே தனக்குத் தானே தனது கொள்கையினால் மக்களிடையே பரவும், வாளால் அல்ல.
👉இஸ்லாம் இந்த உலகில் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்றால், அந்த வாள் அறிவாற்றல் மற்றும் உறுதியான வாதங்கள் என்ற கூர்மையான வாளாகத்தான் இருக்கும். இந்த வாள் தான் மக்களின் உள்ளங்களையும், அறிவையும் வெற்றி கொள்ளும். இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
👉(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!
(அல்குர்ஆன் 16:125)
✍️முஹம்மது என்ற ஒரு தனி மனிதர் உலகத்தில் வாழ்ந்த பல கோடிக்கணக்கான மக்களை வாள்முனையில் முஸ்லிமாக மாற்றினார் என்பது என்று நம்புவது பெரும் முட்டாள்தனமாகும். எந்த ஒரு கருத்தையும் வாள் முனையில் பல கோடிக்கணக்கான மக்களை சென்றடைய செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
✍️இந்த உலகத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனேசியா ஆகட்டும், அதேபோன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவாக இருக்கட்டும், இந்த இரண்டு நாடுகளிலும் எந்த ஒரு முஸ்லிம் ஆக்கிரமிப்பு போரும் நடக்கவில்லை. இருந்தபோதிலும் இஸ்லாம் அங்கு பெரும்பான்மை பெற்று முதன்மையாக உள்ளது. வாள் முனையில் இல்லாமல் இஸ்லாம் என்ற சத்திய செய்தியை கொண்டே அந்த நாடுகளில் வாழும் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டனர்.
✍️அதுமட்டுமில்லாமல் இஸ்லாம் ஆட்சி செய்துகொண்டிருந்த உலகத்தின் பெரும் பகுதிகள் இஸ்லாமிய ஆட்சி சென்ற பிறகும் கூட அந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் இஸ்லாத்தையே தொடர்ந்து பின்பற்றி வருவதையும் நாம் காணமுடியும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுங்கோன்மை, சர்வாதிகாரம், இரட்டை நீதி, என போன்ற பல கொடுமைகளுக்கு மத்தியிலும், அதனை சகித்து கொண்டு அந்த பூர்வீக குடிமக்கள் பிற மக்களையும் இஸ்லாத்தின் பால் அழைக்கும் அளவுக்கு இஸ்லாத்தில் உறுதியானவர்களாக உள்ளனர். இது எகிப்து சிரியா லெபனான் ஜோர்டான் பலஸ்தீன் வட ஆப்ரிக்கா பால்கன் நாடுகள் மற்றும் ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தும். இங்குள்ளவர்கள் ஒரு காலத்தில் இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் இருந்தாலும், பின்னாளில் இஸ்லாமிய அரசாங்கம் நீக்கப்பட்டு, கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வந்த அவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பலவற்றையும் சகித்துக்கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து, முஸ்லிம் அல்லாத பிற மக்களையும் இஸ்லாத்தின் பால் அழைத்து தங்களின் இஸ்லாத்தின் பாலான நேசத்தை காட்டுகின்றனர்.
✍️முஸ்லிம்கள் 800 வருடம் ஸ்பெயினை ஆண்டபோதும் அங்குள்ள யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் மத சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள். தங்கள் மதத்தைப் பின்பற்றவும், வழிப்பாட்டுத்தல உரிமையையும் அவர்கள் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே ஸ்பெயினில் முஸ்லிம்களை காட்டிலும் முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பான்மையாக இன்றும் இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போதிலும் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருவது முஸ்லிம்கள் எவர் மீதும் வாள் முனையில் இஸ்லாத்தை திணிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. வாள் முனையில் இஸ்லாம் திணிக்கப்படவில்லை என்பதற்கு இந்தியாவும் ஸ்பெயினும் சாட்சியமாக விளங்குகின்றன.
✍️யூதர்கள் ஐரோப்பாக் கண்டத்தில் கிறிஸ்தவர்களின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் அமைதியான முறையில் வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. கிறிஸ்தவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் தான் தஞ்சம் புகுந்தனர். மத்திய கிழக்கு ஜோர்டான் லெபனான் சிரியா எகிப்து போன்ற நாடுகளில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் தங்கள் மதத்தை பின்பற்றும் முழு உரிமையோடு வாழ்ந்துள்ளனர் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
✍️ரீடர் டைஜஸ்ட் 'அல்மனக்', ஆண்டு புத்தகம் 1986இல் வந்த ஒரு கட்டுரையில், 1934 முதல் 84 வரை கடந்த 50 ஆண்டுகளில் உலகில் பெரும் மதங்களின் வளர்ச்சி விகிதம் பற்றிய கணக்கெடுப்பில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 235 எனவும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி விகிதம் 47 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெரும் மதங்களின் வளர்ச்சி வீதத்தில் இஸ்லாம் முதலிடத்தை பெற்றிருந்தது. இந்த அரை நூற்றாண்டில் இஸ்லாம் எங்கும் போர் தொடுக்கவில்லை. இருந்து போதிலும் அதன் வளர்ச்சி விகிதம் இமாலய வளர்ச்சி அடைந்திருந்தது. இதன்மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது வாளால் அல்ல, அதன் கொள்கையால் என்பதை புரிந்துகொள்ள முடியும். இன்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமே மிக வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கின்றது. இத்தனைக்கும் அந்த நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
✍️இஸ்லாமிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிமல்லாதவர்களுக்கு பூரணமான சுதந்திரம் கொடுத்துள்ளது. அவர்களது வழிபாட்டுத்தலங்கள் இஸ்லாமிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும். முஸ்லிமல்லாதவர்கள் தங்களுக்கென்று தனி நீதிமன்றங்கள் உருவாக்கிக் கொள்ள இஸ்லாமிய சட்டம் அனுமதி தந்துள்ளது. இஸ்லாமிய அரசு தன் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் உயிர் மற்றும் சொத்துகளை புனிதமானதாகக் கருதும். இதில் எந்த பாரபட்சமும் இருக்காது.
✍️கிலாபத் என்ற உலக இஸ்லாமிய அரசாங்கத்தை முஸ்லீம்கள் இழந்த பிறகும், இஸ்லாம் முஸ்லீம் அல்லாதவர்களிடம் மிக வேகமாக பரவி வருவது, இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல, அது தனது சத்திய கொள்கையால் பிறரை ஈர்க்கும் மார்க்கம் என்பதற்கு சான்றாகும்.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
(அல்குர்ஆன் 61:8)

கருத்துகள்
கருத்துரையிடுக