அறிவியல் உலகில் இஸ்லாமிய ஸ்பெயினின் பங்களிப்பு
அறிவியல் உலகில் இஸ்லாமிய ஸ்பெயினின் பங்களிப்பு
✍️ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு இஸ்லாமிய ஸ்பெயின் நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரங்கள் மங்கி பார்பாரியன்(காட்டுமிராண்டிகள்) கலாச்சாரம் வடக்கு ஸ்பெயின் முதல் முழு ஐரோப்பாவையும் ஆதிக்கம் செலுத்தும் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தெற்கு ஸ்பெயின் வழியாக இஸ்லாம் வந்தடைந்தது. இதன் மூலம் அப்பாஸிய கிலாபத்தின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தத்துவ மரபு ஆகியவை அல் அந்தலூசின் சாதனைகளுடன் ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு இஸ்லாமிய ஸ்பெயின் பின்னர் ஒரு பாலமாக அமைந்தது.
✍️ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் முதல் நூற்றாண்டில் பண்பாடு பெரும்பாலும் பாக்தாத்தில் உள்ள அப்பாஸிய கிலாபத்தின் வளர்ந்து வரும் நாகரிகத்தின் வளர்ச்சியிலிருந்து பெறப்பட்டது. பிறகு அப்துல் ரஹ்மான் III (912-961) ஆட்சியின் போது, இஸ்லாமிய ஸ்பெயின் தனது சொந்த பங்களிப்பைச் செய்யத் தொடங்கியது. அப்துல் ரஹ்மான் III மதம் மற்றும் மதச்சார்பற்ற அறிவியல் என இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தான் ஆண்ட காரடோபாவை கலிபாக்கள் ஆண்ட பாக்தாத்துக்கு இணையாக உலகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக பாக்தாத்தில் இருந்து புத்தகங்களை இறக்குமதி செய்து, சில அன்பளிப்புகளை கொடுத்து அறிவியல் அறிஞர்கள் பெருக ஊக்குவித்தார். இதன் விளைவாக அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவவாதிகள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அல் அந்தலூசுக்கு குடிபெயரத் தொடங்கினர். இதன் காரணமாக விரைவில், நூலகங்கள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வளர்ந்து, அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு ஸ்பெயின் சிறந்ததாக அமைய தேவையான அறிவார்ந்த பாரம்பரியம் மற்றும் கல்வி முறை நிறுவப்பட்டது.
✍️இவ்வாறு அல்-அந்தலூசுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அறிஞர்களில் ஒருவரான அப்பாஸ் இப்னு ஃபிர்நாஸ், இசை கற்பிப்பதற்கு கார்டோபாவுக்கு வந்தவர் ஆவார். அவர் பாக்தாத்தில் இந்தத் துறையில் நவீன முன்னேற்றங்களுடன் அப்துல் ரஹ்மானின் இசை மன்றத்தை மேம்படுத்தினார். ஒரு துறையோடு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத அப்பாஸ் இப்னு ஃபிர்நாஸ் அவர்கள், விமான இயக்கவியல் சம்பந்தமாக தனது ஆய்வை தொடங்கினார். லியோனார்டோ டா வின்சி கனவு கண்ட விமானத்தை 600 ஆண்டுகளுக்கு முன்பே, மர சட்டகத்தில் ஒரு ஜோடி இறக்கைகள் பொருத்தி முதன்முதலாக விமானத்தில் பறக்க முயற்சித்தார். பின் முதுகு காயத்துடன் தனது பரிசோதனையில் இருந்து பிழைத்து கொண்டார். மேலும் அவர் ஒரு புகழ்பெற்ற கோளரங்கத்தை கட்டினார்.
✍️பத்தாம் நூற்றாண்டில் கார்டோபன் கணிதவியலாளர்கள் தங்கள் தனிப்படட பங்களிப்புகளை செய்யத் தொடங்கினர். அல் அந்தலூசின் முதல் அசல் கணிதவியலாளரும் வானியலாளருமான மஸ்லாமா அல் மஜ்ரிதி ஒன்பதாம் நூற்றாண்டில் முன்னணி வானியலாளரான வலென்சியாவின் இப்னு அபி உபைதா போன்ற திறமையான விஞ்ஞானியாக அவர் இருந்தார். அவர் கணிதம் மற்றும் வானியலில் குறித்து பல படைப்புகளை எழுதினார். டால்மியின் அல்மாஜெஸ்ட்டின் அரபிக் மொழிபெயர்ப்பைப் படித்தார், விரிவுபடுத்தினார், புகழ்பெற்ற அல்--க்வரிழ்மி வானியல் அட்டவணையை விரிவாக்கி திருத்தினார். பெர்சிய காலண்டரின் தேதிகள் ஹிஜிரிய தேதியுடன் தொடர்புடையவையாக மாற்றப்பட்ட அட்டவணையை அவர் தொகுத்திருந்தார், எனவே முதல் முறையாக பெர்சியாவின் கடந்தகால நிகழ்வுகள் துல்லியமாக கணக்கிடப்பட்டது. அர்சாகேல் என மேற்குக்கு அறியப்பட்ட அல்-சர்காலி, பதினோறாம் நூற்றாண்டில் கார்டோபாவில் செழித்தோங்கிய மற்றொரு கணித கணிதவியலாளரும் வானியலாளருமானார். தொழில்நுட்ப திறனுடன் கோட்பாட்டு அறிவை இணைத்து, அவர் வானியல் பயன்பாட்டிற்கான துல்லியமான கருவிகளின் கட்டுமானத்தில் சிறந்து விளங்கினார். பகல் மற்றும் இரவின் மணிநேரத்தை தீர்மானிப்பதற்கும், சந்திர மாதங்களின் நாட்களைக் குறிக்கவும் ஒரு நீர் கடிகாரத்தை கட்டினார். அவர் புகழ்பெற்ற டோலிடேன் அட்டவணைக்கும் மிக முக்கிய பங்காற்றினார். இது வானவியல் தரவுகளின் மிகவும் துல்லியமான தொகுப்பாகும். காப்டிக், ரோமன், சந்திரன் மற்றும் பெர்சியன் மாதங்கள் தொடங்கும் நாட்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு அட்டவணையைக் கொண்டிருக்கும் அல்மானக் அட்டவணையை தயாரித்தார். கிரகங்களின் கால நிலையை வழங்குவதற்கான பிற அட்டவணைகளையும் தயாரித்தார். இன்னும் சிலர் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் கணிப்பை கண்டறிய மேலும் மேம்படுத்தினார்கள். மேலும் அவர் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை கொண்ட மதிப்புமிக்க அட்டவணையை அல்-சர்காலி தொகுத்தார்.
✍️இன்னொரு முக்கியமான அறிஞர் அல்-பிட்ருஜி ஆவார். அரிஸ்டாட்டிலின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நட்சத்திர இயக்கத்தின் ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். அவரது நூலினால், பின்னாளில் மேற்குலகத்தில் பிரபலம் ஆனார். இன்றும் பல நட்சத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் வானியலாளர்களின் பெயர்களையே தங்கியுள்ளது. இது கடந்த கால முஸ்லிம்களின் அறிவியல் மேம்பாட்டை காட்டுகிறது.
✍️இஸ்லாமிய ஸ்பெயினில் முஸ்லீம் விஞ்ஞானிகள் மருத்துவத் துறையிலும் தங்கள் பங்களிப்பை திறம்பட செய்தனர். பாக்தாத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய மருத்துவர்கள் பெரும் பங்களிப்பை செய்தது போன்று, அல்-அண்டலஸில் முஸ்லிம் மருத்துவர்கள் முக்கிய பங்களிப்பு செய்தனர். உதாரணமாக, இப்னு அல்-நபிஸ் இரத்தத்தின் நுரையீரல் சுழற்சியை கண்டுபிடித்தார். குறிப்பாக பத்தாம் நூற்றாண்டில், அல்-அந்தலூசு பெரும் எண்ணிக்கையிலான சிறந்த மருத்துவர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் சிலர் பாக்தாத்தில், கிரேக்கத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவ புத்தகங்களை படித்தவர்களாக இருந்தனர். அவர்களில் இப்னு ஷுகைத் குறிப்பிடத்தகுந்தவர். நோயாளியின் உடல் உணவிற்கு பதில் அளிக்கவில்லை என்றால், பரிந்துரைக்கப்படும் அடிப்படை மருந்து சம்பந்தமாக தனது பணியை மேற்கொண்டவர். மற்றொரு முக்கிய மருத்துவர் அபு அல்-காசிம் அல்-சஹ்ராவி, இடைக்காலத்தின் மிகப் பிரபலமான அறுவை சிகிச்சை மருத்துவர். மேற்கில் அபூல்காசிஸ் மற்றும் அல்-புகாசிஸ் என்ற பெயரில் அறியப்பட்ட இவர், தஸ்ரிஃப் என்ற நூலை எழுதினார். லத்தீன் மொழியில் இவரது புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. பின்னர் இவரது நூல் மத்திய காலங்களில் ஐரோப்பிய மருத்துவ பல்கலைக்கழகங்களின் முன்னணி மருத்துவ நூலாக மாறியது. அவின்சர் என்று அறியப்பட்ட இப்னு சுஹ்ர் அவர்கள் இதயத்தை சுற்றி வரும் கட்டிகள் குறித்து விவரித்தவர். இபின் ருஷ்ட் மருத்துவ கோட்பாடுகள் மற்றும் விதிகள் குறித்து ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதினார்.
✍️மருந்தின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, அன்டலுசியன் விஞ்ஞானிகள் தாவரங்களிலும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உதாரணமாக, இப்னு அல்-பைதர், மிகவும் பிரபலமான அண்டலூசிய தாவரவியலாளர். இவர் எளிய மருந்துகள் மற்றும் உணவு எனும் ஒரு புத்தகத்தை எழுதினார். இது மருத்துவ தாவரங்களின் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்ட தொகுப்பாகும். அதில் சொல்லப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் ஸ்பெயின் மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிக்கு சொந்தமானவை. மேலும் இதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் பெரும் முயற்சி எடுத்தார். மற்றொரு ஆய்வுப் புத்தகத்தில், இப்னு அல் அவ்வாம் என்பவர் நூற்றுக்கணக்கான தாவரங்களை பட்டியலிட்டு, பயிர்ச்செய்கை மற்றும் பயன்பாடு பற்றிய துல்லியமான வழிமுறைகளை அளித்துள்ளார். உதாரணமாக, மரக்கன்றுகள் நடுதல், கலப்பினங்களை உற்பத்தி செய்தல், வெடித்துச் சிதறல்கள், வாசனை திரவியங்களை உருவாக்குவதற்கும் மற்றும் பூச்சிகள் பற்றியும் எழுதியுள்ளார்.
✍️அல் அந்தலூசின் மற்றொரு முக்கிய துறை புவியியல் ஆய்வு ஆகும். அரசியல் பொருளாதாரம் மற்றும் நுகர்வு போன்ற புறக் காரணங்கள் எதுவுமின்றி அல் அந்தலூஸ் இஸ்லாமிய புவியியல் ஆய்வு வல்லுனர்கள் தங்கள் பங்களிப்பை செய்தனர். அஹ்மத் இப்னு முஹம்மத் அல்-ராசி என்பவர் அல் அந்தலூசின் அடிப்படை புவியியல் பற்றியும் மற்றும் முஹம்மது இபின் யூசுஃப் அல்-வராக் என்பவர் வட ஆபிரிக்காவின் பரப்பளவைப் பற்றியும் விளக்கம் தொகுக்கப்பட்டது. புவியியல் தொடர்பான மற்றொரு பங்களிப்பானது அல்-பக்ரி என்ற அறிஞரிடமிருந்து வந்தது. இவர் செவில்லியின் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய அமைச்சராகவும், ஒரு திறமையான மொழியியலாளரும், இலக்கியலாளரும் ஆவார். அவரது இரண்டு முக்கிய புவியியல் படைப்புகள் அரேபிய தீபகற்பத்தின் புவியியலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.. அது இடங்களின் பெயர்களை தெளிவுபடுத்துவதற்காக அகரவரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராமங்கள், நகரங்கள், நீர் பள்ளத்தாக்கு மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை அவர் ஹதீஸ் மற்றும் வரலாற்றில் இருந்து விளக்கியிருந்தார். மற்றொன்று பல்வேறு நாட்டு குறிப்புகளை கொண்ட உலக கலைக்களஞ்சியமாக இருந்தது. ஒவ்வொரு நுழைவும் ஒரு குறுகிய வரலாற்று அறிமுகத்தால் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டினதும் முக்கிய அம்சங்கள், முக்கிய நகரங்கள் மற்றும் நிகழ்வுகளின் மக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றின் விளக்கங்கள் இதில் அடங்கும்.
✍️இப்னு சுபைர், இபின் பட்டுதாவின் போன்றவர்கள் புவியியல் ஆய்வுகளின் தங்களது முக்கிய பங்களிப்புகளையும் செய்துள்ளனர். இப்னு பட்டுதா வட ஆபிரிக்காவில் பிறந்தவர், பின்னர் இஸ்லாமிய ஸ்பெயினின் கலாச்சார வட்டாரத்தில் இருந்து, இப்னு பட்டுடா இருபத்தி எட்டு ஆண்டுகள் விரிவாக பயணம் செய்தார் மற்றும் வரலாற்று அறிஞர்களுக்கும் புவியியலாளர்களுக்கும் ஒரு பொக்கிஷ ஆதாரமாக விளங்கிய ஒரு பயண புத்தகத்தை உருவாக்கினார். இது மக்கள், இடங்கள், வழிசெலுத்தல், கேரவன் வழித்தடங்கள், சாலைகள், மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற மதிப்புமிக்க தகவல்களை உள்ளடக்கியது.
✍️மேற்குலகிற்கு இஸ்லாமிய ஸ்பெயினின் பங்களிப்புகளின் பட்டியல் கிட்டத்தட்ட முடிவில்லாதது. கணிதம், பொருளாதாரம், மருத்துவம், தாவரவியல், புவியியல், வரலாறு மற்றும் தத்துவம் ஆகியவற்றில் இஸ்லாமிய ஸ்பெயின் பங்களிப்பு செய்துள்ளது. மேலும் உலோக வேலைப்பாடு, நெசவு, மற்றும் கட்டடங்களுக்கான கைவினை போன்றவற்றில் அல்-அந்தலூஸ் முக்கிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கி பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக