பவுல் ஆதிபாவத்தை போதித்தாரா?


பவுல் ஆதிபாவத்தை போதித்தாரா?








✍ஆதாம் காலம் முதல் இன்று வரை கர்த்தர் ஒருவரே தேவன். அவர் என்றும் மாறாதவராக இருக்கிறார்.  கர்த்தர் ஒருவரே தேவன் என்று இயேசு போதித்த போதிலும் இயேசுவின் காலத்தின் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு திரித்துவம் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்தது. திரித்துவத்திற்காக அடிப்படையாக பார்க்கப்படுவது ஆதிபாவம் என்ற நவீன கொள்கையே.

✍இரண்டாம் நூற்றாண்டில் திரித்துவம் லியோனின் பிஷப் ஐரெனியுஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு  பின்னர் மற்ற பிஷப்கள் அதிலும் முக்கியமாக அகஸ்டீன் எனும் பிஷப்பினால் பரப்பப்பட்டது. இவ்வாறு ஆதிபாவம் மக்களிடையே பரவ தவறாக புரிந்து கொள்ளப்பட்ட  பவுலின் வார்த்தைகள் காரணமாக அமைந்தன.

➡️இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
(ரோமர் 5:12)

✍ஆதாமின் பாவத்தை மனிதர்கள் அனைவரும் சுமக்கிறார்கள் என்று இந்த வசனம் எங்கும் சொல்லவில்லை. மாறாக ஆதாமின் மூலமாக மனிதர்கள் அனைவருக்கும்  மரணம் வந்தது என்று சொல்கிறது. இங்கு சொல்லப்பட்டுள்ள மரணம் ஆன்மீக மரணம் பற்றி அல்ல. மாறாக இந்த உலகத்தில் நடக்கும் மரணம் பற்றியே இங்கு பேசப்பட்டுள்ளது. இவ்வாறு நாம் புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளுக்கு அதாவது பிதாக்கள் நிமித்தம் பிள்ளைகளும், பிள்ளைகள் நிமித்தம் பிதாக்களும் கொல்லப்படக்கூடாது என்ற சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கும். மனிதர்கள் நீதிமான்களாக இருக்க கர்த்தரால்  இத்தகைய சட்டம் கொடுக்கப்பட்டு இருக்கும்போது ஆதாமின் பாவத்தை அனைவரின் மீதும் சுமத்தி இறைவன் எவ்வாறு நமக்கு அநீதி இழைப்பான் என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

✍அதுமட்டுமல்ல பைபிளின் படி இறைவனின் விருப்பமே மனிதன் பூமியில் பல்கிப் பெருகி அதனை ஆள வேண்டும் என்பதுதான். இறைவனின் இந்த விருப்பம் நடக்க வேண்டுமென்றால் கர்த்தரின் கட்டளையை மீறி அதன் மூலம் பூமிக்கு அனுப்பப்படுவது தான். இதன் காரணமாகவே ஆதாம் பூமிக்கு அனுப்பப்பட்டு மனித இனம் பல்கி பெருகியது என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

➡️பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
(ஆதியாகமம் 1:28)

✍ஆதலால் ஆதாமின் மூலம் வருகின்ற மரணம் என்பதும் கர்த்தரால் தீர்மானிக்கப்பட்ட ஓன்று தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

✍கிறிஸ்தவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பவுலின் மற்றொரு வசனம்.

➡️அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
(ரோமன் 5:19)

✍மேற்கண்ட வசனத்தையும் ஆதிபாவத்திற்கு ஆதாரமாக கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த வசனத்தை பைபிளின் அடிப்படையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஆதிபாவத்தை போதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஆம் அது உண்மைதான். ஆதாமின் வழியாக மனிதர்கள் அனைவரும் பாவிகளாக்கப்பட்டு இருந்தால் "ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல" என்று சொல்லப்படுவதற்கு பதிலாக "அனைவரும் பாவிகளாக்கப்பட்டது போல" என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த வசனத்தில் ஒரு மனுஷனுடைய பாவத்தினால் அநேகர் பாவிகளாக்கப்பட்டு உள்ளனர் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஆதாம் போன்று எவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்களோ அவர்களே பாவிகள் என்று தான் இங்கு சொல்லப்படுகிறது. இந்த கருத்தை இந்த வசனத்தின் மறுபகுதி உண்மைப்படுத்துகிறது. அதாவது இந்த வசனத்தின் மறுபகுதி "ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்" என்று சொல்கிறது. இயேசுவின் கீழ்படிதல் மூலம் அனைவரும் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்று சொல்லாமல் அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் என்று சொல்கிறது. ஏன் அவ்வாறு இந்த வசனம் சொல்கிறது? ஏனெனில் எவர்கள் இயேசுவின் போதனைகளை கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் தான் நீதிமான்களாக்கப்படுவார்கள்... மற்றவர்கள் நீதிமான்கள் இல்லை என்று இந்த வசனத்தில் சொல்லப்பட்டது அனைத்து கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்வர். இதே அடிப்படையில் இந்த வசனத்தின் முதல் பகுதியையும் நாம் பார்த்தால் ஆதிபாவத்தை பவுல் போதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

✍மேற்கண்ட இந்த வசனங்கள் தான் பிற்காலத்தில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு இயேசு மற்றும் பவுல் கூட அறிந்திடாத ஆதிபாவம் கிறிஸ்தவ சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைந்து விட்டது.

✍இந்த ஆதிபாவம் இயேசு உட்பட எந்த தீர்க்கதரிசியும் அறியாத ஒன்று என்பதை பைபிள் நமக்கு உணர்த்துகிறது. இன்று வரையுள்ள யூதர்களில் உள்ள  எவரும் ஆதிபாவம்  என்ற கொள்கையை நம்பவில்லை. ஒரு யூதனாக வாழ்ந்த இயேசுவும் அதைப்பற்றி அறியாமல் தான் இருந்துள்ளார்.

✍பழைய ஏற்பாடும் ஆதிபாவத்திற்கு முரணாண போதனைகளை தான் சொல்கின்றன.

➡️பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
(எசேக்கியல் 18:4)

➡️பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
(உபாகமம் 24:16)

➡️பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.

➡️அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
எரேமியா 31:29-30

✍எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத ஆதிபாவத்தை நம்புவதை  கிறிஸ்தவர்கள் கைவிட வேண்டும். கிறிஸ்தவர்கள் நம்பும் ஆதிபாவம் இறைவனை நரபலி கேட்கும் சாத்தானாக தான் காட்டுகிறது என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்